கண்ணபிரான் திவ்ய அம்ருத காணிக்கை

இல்லாத மலர் கொண்டு அர்ச்சிக்கலாமே!

ஒரு பெரியவர் வருத்தத்துடன் பேசினார். ஊரே விஷக் கிருமியின் ஆதிக்கத்தால் கட்டுண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறது.

நாள் ஒவ்வொன்றும் இல்லத்தினில், எம்பிரானின் வாச ஸ்தலமான சாளக்ராம ஆராதனையின் போதில், அவனுக்கு உகந்த திருத் துழாயை  அர்ச்சிக்காமல் இதுவரையில் இருந்ததே  கிடையாது.

கடைகளே இல்லாத போது பூவும், துளசியும் எங்கிருந்து வாங்கி எம்பெருமானுக்குச் சூட்டுவேன், என்று கண்ணீர் உகுத்தார் பெரியவர். 

அடியேன், அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். 'ஐயா தாங்கள் தினமும் சூட்டிடும் துளசியினால் எம்பெருமான் இன்னும் முழுமை அடைகிறான் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா'  என்று கேட்டேன்.
கண்டிப்பாக இல்லை என்றார் பெரியவர்.

நம்மாழ்வாரின் திருவாய் மொழி பாசுரத்தில் 'பரிவதில் ஈசன், படியை பண்புடனே பேசி , ஆராதனைக்கு அரியன் இலன்....', என்ற பாசுரத்தின் பொருளை அவரிடம் கூறிட முயன்றேன்.

 'பரிவு கொள்வதில் அவனை மிஞ்சியவர் எவரும் இலர் என்னும் படியாய் அவனைப் பாடி, ஆராதனைக்கு அரியவன் இல்லாதவன், மிக எளியவன் எம்பிரான் என்று புரிந்து கொண்டோமே என்னில், அதனை விட அவனை அர்ச்சிக்க  வேண்டும் வஸ்து வேறொன்றும் இல்லையே. 

பட்டர் அருளிச் செய்தார் - 'வர்ஷ பிந்தாரிவ ஆப்தோ சம்பந்தாத் ஸ்வாத்ம லாப':   எப்படி கடலில் பெய்யும் மழை, கடலை நிரப்புவதற்கு இல்லாமல், மறுபடியும் கடல் நீரினை முகந்து மேகங்களை உருவாக்கிடும்  ஸ்வய லாபத்திற்காகச் செய்கிறதோ' அவ்வண்ணம் முழுவதான எம்பிரானுக்கு எந்த வஸ்துவும் புதியது அல்ல. 

அவ்வண்ணமே, நாம் எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்யும் வஸ்துக்கள் எல்லாம் அவனால் உருவாக்கப் பட்டவை.  அவற்றை நாம் அர்ச்சிப்பதே நம்முடைய மனதின் திருப்திகாக அல்லாமால் அவனுடைய பூரணத்துவத்தை சீர் படுத்திட அல்ல. 

இந்தப்  பிரபந்த பாசுரம் மேல் சொன்ன  கருத்தினை மிக அழகாகப் பேசுகிறது.

கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்,
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்,
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று,
உள்ளாதார்  உ ள்ளத்தை உ ள்ளமாக் கொள்ளோமே. (பாசுர எண் 2017)

  ' கள் என்னும் தேன் மிகுந்த திருத் துளசியும், அரளிப் பூவும், வில்வ இலைகளும், முட்கள் நிறைந்த தாமரைப்பூவும், ஆம்பல் மலரும் காணும் போதில், 

ஹம்ச அவதாரனாகவும், இந்தப் பூமியினைப் பிளந்து காப்பாற்றிய வராஹனாகவும் உள்ள எம்பிரானின் பொன்னடிகளை இவை அலங்கரிக்கட்டுமே என்று எவன் ஒருவன் எண்ணிட வில்லையோ, அவனுடைய மனதினை ஒரு மனதாகவே நாம் கருத மாட்டோம் என்று ஆழ்வார் அருள்கிறார்.

கிடைக்கும் எந்த ஒரு மலரும் எம்பெருமானுக்கு அர்ச்சிக்க  உகந்ததே. எந்த மலரோ, துளசியோ கிடைக்காமல் போனால் அவனை மனதார, மலர்களைத் தூவிடும் பாவனையோடு மட்டுமே   அர்ச்சித்தலே எம்பிரானுக்கு நாம் சமர்ப்பிக்கும் மிக உயர்ந்த புஷ்பாஞ்சலிக்குச் சமம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெகந்நாதப் பெருமாளை  உறுத்திய செண்பகப்பூ

'செண்பக மல்லிகை யோடு செங்கழுநீர் இருவாட்சி எண் பகர் பூவும் கொணர்ந்தேன்', என்று யசோதையின் மொழியாக பெரியாழ்வார் பேசுவார்.

எம்பெருமான் மிகவும் விழையும் செண்பகம், மல்லிகை, செங்கழுனீர், இருவாட்சி என்னும் எண்ணிக்கையில் பேசக் கூடியதான பூக்களைக் கொண்டு வந்தேன், என்பதனால்

வேறு மலர்கள் எம்பெருமானுக்கு உகப்பில்லை என்று பேசுபவர்களின் அறியாமையை விலக்கிட வியாக்கியான சக்ரவர்த்தியான பெரியவாச்சான் பிள்ளை கூறிய ஒரு கதை. 

பூரியில் ஜெகந்நாதப் பெருமாளுக்கு விசேஷமாக செண்பக மல்லிகையை தினம்தோறும் சாத்துவது வழக்கம்.

பெருமாளை சேவிக்க வந்த சில ராஜகுமாரர்கள், சற்றே நேரம் தாழ்ந்து தரிசிக்க வந்ததனால், கடைவீதியில் செண்பகப் பூவை வாங்கிடச் சென்றார்கள். ஏற்கனவே எல்லாம் விற்றுப் போனதினால், எங்கு தேடியும் ஒரு பூ கூட கிடைக்கவில்லை. இறுதியில் ஒரு வணிகரிடம் ஒரே ஒரு செண்பகப் பூ மிஞ்சி இருந்ததாம்.

அந்தப் பூவை எந்த ஒரு விலையானாலும் கொடுத்து வாங்கிட ராஜ குமாரர்களுக்குள் போட்டா போட்டி ஏற்பட்டது. விலையை ஏற்றிக் கொண்டே போனார்கள்.

செல்வச் செருக்கு மிகுந்த ஒரு ராஜகுமாரன் மிக மிக அதிக விலை கொடுத்து அந்த ஒரே ஒரு செண்பகப் பூவை வாங்கி ஜெகந்நாதருக்குச் சாத்தினானாம்.

அன்று இரவு, ராஜகுமாரனுடைய  கனவில் ஜெகந்நாதர் தோன்றி ' ஐயகோ நீ சூட்டிய செண்பகப் பூவை  என்னாலே சுமக்க முடியவில்லையே. மிகவும் உறுத்துகிறதே' என்று தெரிவித்தாராம்.

" பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்ச தி /
ததஹம் பக்தி உபஹ்ருதயம் அச்னாமி ப்ரயத ஆத்மந : // "

என்று கீதாச்சார்யனான கண்ணன் உரைத்தது போலே 'சிறிய இலையோ, மலரோ, பழமோ ஒரு துளி நீரோ எம்பெருமானை அர்ச்சிக்கப்  போதுமானவை. அவன் வேண்டுவதெல்லாம் அவன் மேல் நமக்கு ஏற்பட்ட பக்தியின் ஆழத்தையும் அந்நியோன்னியத்தையும் தான், என்பதனை எம்பெருமானின் மொழி கேட்டு செருக்கு ஒழிந்த ராஜகுமாரன் புரிந்து கொண்டானாம். 

Comments